Friday, January 6, 2012

அண்ணலும் - தந்தையும் !


நம்முடைய தலைமுறையிலே வாழ்ந்த, 20 -ஆம் நூற்றாண்டிலே நாம் அறிந்த மாமேதைகளில் ஒருவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். 1956-ஆம் ஆண்டு டிசம்பர் 6 - ந் தேதி அவர் மறைந்தார். அவர் மறைந்து அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது.

ஆனால், அவருடைய புகழும், அறிவு திறனும்,1990-க்குப் பிறகுதான் மிக அழுத்தமாக வெளிப்பட்டது என்று சொல்ல வேண்டும்.

1989-ல் அவருடைய நூற்றாண்டு வந்தது. அப்போதுதான் அவரைப் பற்றிய நூல்கள், விவாதங்கள் எல்லாம் அரங்கிற்கு வந்தன. அவர் காலம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காவே போராடி வாழ்ந்தார். தன்னுடைய தூக்கத்தைத் தொலைத்து தன் மக்களுக்காகப் படித்து வந்த ஒரு மாமேதை அவர்.

அவருடைய படிப்பு என்பது மிகவும் வியப்புக்குரியது. படிப்பிலே அப்படி என்ன வியப்பு என்று கேட்டால், படிக்கவே கூடாது அல்லது படிப்பை பற்றி நினைக்கவே கூடாது என்று ஒடுக்கி வைக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வந்த ஒரு வைரம் அவர். உலகமே வியக்கும் அளவிற்கு படித்து முடித்திருக்கிறார் என்றால் அந்த படிப்புப் வியப்புக்குரியதுதானே.


வெளிநாட்டிருக்கு போய் திரும்புகிற போது, கப்பலில் பெட்டி பெட்டியாக அவருக்கு பின்னால் அவர் வாங்கி வந்த பொருட்கள் இறங்கின. எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள். இத்தனை பெட்டிகளா ? என்னென்ன பொருட்களையெல்லாம் வாங்கி வந்திருப்பார் என்று பார்த்தால், ஒரு பெட்டியில் அவருடைய துணிகள் இருந்தன. அந்த ஒரு பெட்டியை தவிர மற்ற அத்தனை பெட்டிகளும் புத்தகங்களாகவே இருந்தன என்பது நமக்கு இப்போதும் ஒரு வியப்பை ஏற்படுத்துகிறது.

லண்டனில் இருக்கிற நூலகத்தில் மிகுதியாகப் படித்தவர்கள், மிகுதியான நேரத்தைச் செலவிட்டவர்கள் என்று இரண்டு பேரைத்தான் சொல்கிறார்கள். ஒருவர் கார்ல் மார்க்ஸ், இன்னொருவர் அம்பேத்கர். உலகமே வியக்கிற அளவிற்கு ஏராளமாகப் படித்த பெருமகன் அவர்.

சாதி ஒழிப்பு (Anihilation of Caste) என்று அவர் எழுதியிருக்கிற அந்த புத்தகம் இன்றைக்கும் கூட பல்வேறு சிந்தனைகளை, அழுத்தமான எண்ணங்களை நம்மிடத்திலே உருவாக்குகிறது. சாதியைப் பற்றிய மிக விரிவான ஆய்வை அவர்தான் மேற்கொண்டார். அதைத் தந்தை பெரியார் அவர்கள்தான் சாதி ஒழிப்பு என்கிற பெயரில் முதன் முதலாகப் தமிழில் மொழிப் பெயர்த்துக் குடியரசு பதிப்பகத்தின் மூலமாகத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அம்பேத்கரும், தந்தை பெரியாரும், காலம் முழுவதும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மதிப்புடையவர்களகாவும், ஒருவரையொருவர் பின்பற்றக் கூடியவர்களாகவும், பாராட்டக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். தந்தை பெரியார் யாரையும் தன்னுடைய தலைவர் என்று சொல்லவில்லை. நான்தான் தலைவர் என்று சொல்லுவார்.

ஆனால், அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்களே, 1967 - ஆவது ஆண்டு மயிலாடுதுறையிலே நடைப்பெற்ற ஒரு கூட்டத்திலே பேசுகிறபோது உங்களுக்கு மட்டுமல்ல... எனக்கும் அம்பேத்கர்தான் தலைவர் என்று சொன்னார். அந்த அளவுக்கு அம்பேத்கர் மீது ஆழ்ந்த மதிப்பு கொண்டவராகத் தந்தை பெரியார் திகழ்ந்தார்.


அதைப் போலவே மிசோராம் மாநிலத்திலே ஆளுநராக இருந்த பத்மநாபன் அவர்கள், தன்னுடைய நூலிலே ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறார் : 'அம்பேத்கரை 1944 -ஆவது ஆண்டு, சென்னைக்கு வந்திருந்தபோது, அன்று கல்லூரி மாணவராக இருந்த பத்மநாபன் உள்பட ஏராளமான இளைஞர்கள் சந்திக்கிறார்கள். நாங்கள் உங்களைப் பின்பற்றி இங்கே ஓர் இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறோம். நீங்கள்தான் வழிகாட்டவேண்டும்' என்று கேட்ட போது அம்பேத்கர் சொன்னாராம் 'மற்ற மாநிலங்களில் எல்லாம் இளைஞர்கள் வருகிறபோது, அதை நான் ஏற்றுக் கொண்டு அவர்களை இயக்க நெறிகளிலே வழிப்படுத்துகிறேன். ஆனால், தமிழ்நாட்டிலே அதற்குத் தேவையில்லை.

ஏற்கனவே இங்கே இருக்கிற ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள், நான் என்ன காரியங்களையெல்லாம் செய்து கொண்டு இருக்கிறேனோ, எதை சொல்கிறேனோ, அதைதான் அவரும் செய்து கொண்டு இருக்கிறார். எனவே நீங்கள் என்னைத் தேடி வர வேண்டியது இல்லை. ராமசாமி நாயக்கரைப் பின்பற்றினாலே போதும் என்று சொன்னார் என்று பத்மநாபன் தன்னுடயை நூலிலே குறிப்பிடுகிறார்.

எனவே இரண்டு பெரும் ஒருவரையொருவர் பின்பற்றுவதற்கு காரணம் வேறு ஒன்றுமில்லை. இரண்டுபேருமே சமூக நீதிப் போராளிகளாக இருந்தார்கள் என்பதுதான். ஒரு சமூகம் ஏற்றத்தாழ்வு உள்ளச் சமூகமாக இருக்கிறது. அது தமிழ்ச் சமூகமாக இருந்தாலும் சரி, இந்தியச் சமூகமாக இருந்தாலும் சரி, இன்றைக்கு இந்த சமூகம் ஒரு சாதியச் சமூகமாக இருக்கிறது. சாதியம் என்றால் ஏற்றத்தாழ்வுகளைத் தன்னோடு வைத்திருகிறது என்று பொருள். அதுதான் சாதி.


ஏற்றத்தாழ்வுகளை நீக்கிச் சமப்படுத்துவது என்பதுதான், இந்த சமூகத்தைச் சமப்படுத்துகிற முயற்சிதான் சமூக நீதி. அந்த சமூக நீதிக்காகத்தான் தங்கள் வாழ்நாள் முழுவதையும் பெரியாரும், அம்பேத்கரும் கழித்தார்கள் என்று சொல்லவேண்டும்.

ஒருமுறை அம்பேத்கர் வீட்டிலே முகச்சவரம் செய்து கொண்டிருந்தபோது, அருகில் நின்று கொண்டிருந்த ஒரு நண்பர், அண்ணலைப் பார்த்து கேட்கிறார். 'மிக மென்மையான் மனிதர் நீங்கள், மிகுந்த அறிவாளி நீங்கள். ஆனால், சில இடங்களில், சில ஆதிக்கக் கோட்பாடுகளை, ஆதிக்கப் பிரிவினரை எதிர்த்துப் பேசுகிறபோது, மிகக் கடுமையான சொற்களைப் பயன்படுத்துகிறீர்களே ? என்ன காரணம்' என்று கேட்ட போது, அம்பேத்கர் சொன்னார் :

'சில வேளைகளில் நாம் எந்த ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டுமோ, அதைத்தான் பயன்படுத்த வேண்டும். எனது முகத்தில் இருக்கிற முடியை மழிப்பதற்க்கு இந்தக் கத்தி போதுமானதாக இருக்கிறது என்ற காரணத்தினாலே, நாளைக்கு என் தோட்டத்திலே ஒரு நச்சு மரம் வளருமானால், அதை இந்தக் கத்தியை வைத்துக் கொண்டே சாய்த்து விடலாம் என்று கருத முடியுமா ? அதைக் கோடாரியைக் கொண்டுதான் வெட்ட முடியும். எனவே இதற்கு இது போதும். அதற்கு அது வேண்டும்.

சில நேரங்களில் அழுத்தமாக வேரூன்றியிருக்கிற ஆதிக்க குணங்களை அகற்ற வேண்டும் என்று கருதுகிற போது, நான் மிகக் கடுமையான சொற்களைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது' என்று சொன்னார் அம்பேத்கர். ஆகையால், அவர் சில இடங்களில் ஒடுக்கப்பட்ட மக்களிடத்திலே மென்மையாகவும், ஆதிக்க சக்தியிடத்திலே மிக வன்மையானவராக இருந்தார்.


அவர் ஒருமுறை இரவெல்லாம் விழித்து எழுதிக் கொண்டிருக்கிறபோது, செய்தியாளர்கள் அவரைப் பார்த்துக் கேட்கிறார்கள். காந்தியடிகளை நாங்கள் பார்க்க சென்றிருந்தோம். அவரும் கடுமையாக உழைக்ககூடிய மனிதர். ஆனால், அவர் கூட இந்த நேரத்திலே உறங்கி விட்டார். நீங்கள் இன்னமும் விழித்து எழுதிக் கொண்டிருக்கிறீர்களே என்று கேட்டபோது அம்பேத்கர் சொன்னார் :

'அது ஒன்றும் பிழை இல்லை,அவருடைய மக்கள் எல்லாம் விழித்துக் கொண்டிருக்கிறார்கள், எனவே அவர் உறங்கலாம். என்னுடைய மக்கள் எல்லாம் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே நான் விழித்திருக்க வேண்டியிருக்கிறது' என்று சொன்னார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள், இந்தியாவின் மிகப் பெரிய பொறுப்புகளையெல்லாம் வகித்தவர். இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவினுடைய தலைவர். ஆனால், அம்பேத்கரின் பெருமை அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் இல்லை. இந்த சாதிய சமூக அமைப்பை எதிர்த்துப் போராடிச் சமூகத்தை சமதளத்திலே கொண்டுவர முயற்சித்த அந்தச் சமூக நீதிப் போராட்டத்திலேதானிருக்கிறது.



நூல்:

ஒன்றே சொல், நன்றே சொல்.
ஆசிரியர் சுப.வீரபாண்டியன்.

0 comments:

Post a Comment